கடந்த 2020-ஆம் ஆண்டு "கொரோனா' வைரஸ் நோயின் தாக்கத்தால் உலகமே செயலிழந்து, பலரும் வீட்டிலேயே சிறைவைக்கப் பட்டனர். தற்போது 2021-ஆம் ஆண்டு பிறந்தவுடன், தமிழகத்தில் தேர்தல் திருவிழாகளைகட்ட ஆரம்பித்து விட்டது.
இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தாங்கள் தமிழக முதல்வராகவேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் தாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர் களாகவும் ஆகவேண்டும் என்றும் அதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.
2021-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும்போது நிகழும் மாற்றங்களையும் முடிவுகளையும் நிர்ணயம் செய்பவை சூரியன், குரு, சனி, ராகு- கேது ஆகிய ஐந்து கிரகங்கள்தான். சூரியன் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், கட்சி நிர்வாகிகள், அதிகாரப் பதவிகளைக் குறிப்பிடும் கிரகமாகும்.
குரு- வேட்பாளர்களையும்; சனி- பதவியையும், பதவியில் இருக்கும் கால அளவையும்; ராகு- பொய், திருட்டு, சூழ்ச்சி, தந்திரம், தீயவர் சேர்க்கை, நம்பிக்கை துரோகம், ஏமாற்றங்களையும்; கேது- வெற்றி வாய்ப்பில் தடைகளையும், பிறர் ஆதரவில்லாமல் போதலை யும், தனிமைப்படுதலையும், பதவி, தொழில் இழப்பு, கௌரவக் குறைவுகளையும் குறிப்பிடும் கிரகங்களாகும்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளில் சூரியன், குரு, சனி, ராகு- கேது ஆகியவை கோட்சார நிலையில் தரும் பொதுவான பலன்களை இங்கு காணலாம்.
மகர ராசியில் குருவும் சனியும் உள்ளன. அதற்கு ஐந்தாம் இடமான ரிஷபத்தில் ராகு உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் சூரியன் ராகுவுடன் இணைந்து (மேஷம், ரிஷபம்) இருக்கும். ரிஷபத்திற்கு ஏழாமிடமான விருச்சிகத்தில் கேது உள்ளது. சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடப்படி, குரு, சனி, ராகு, சூரியன் ஆகியவை ஒரே நட்சத்திர ராசி மண்டலத்தில் அமர்ந்து தேர்தல் நிகழ்வுகளைத் தீர்மானிக்கும்.
2021-ல் நடக்கும் தமிழகத் தேர்தல் மக்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும். ஆனால் அரசியல் தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையடைய போட்டியிடுபவர்களுக்கும் இதுவொரு மகாபாரதப் போர்க்களமாகவே இருக்கும். பாரதப்போரில் வெற்றிபெற பரந்தாமன் செய்ததுபோன்று, இந்தத் தேர்தலில் வஞ்சகமும் சூழ்ச்சியும் இருக்கும். பொய்களும் நம்பியவரை ஏமாற்றும் செயல்களும் அதிகமாகவே இருக்கும். இந்த செயல்களே வெற்றி- தோல்வியைத் தீர்மானிக்கும்.
மகாபாரதப் போர்க்களத்தில் கண்ணனின் சூழ்ச்சியே வென்றது. தமிழகத்திலுள்ள ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளும், தங்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சிகளை கவனமாக எதிர்கொண்டு, அவற்றை யார் தடுத்துக்கொள்கிறார்களோ அவர்களே ஆட்சிமைக்க முடியும்.
பாரதப்போரில் கிருஷ்ணரின் சூழ்ச்சியால் கர்ணன் கவச குண்டலங்களை தானம்தந்து தன் பலத்தை இழந்தான். கர்ணனின் தேரோட்டி போர்க்களத்தில் தேரை பாதியிலேயே விட்டுவிட்டு இறங்கிச்சென்றான். கர்ணன் போர்புரிய முடியாமல் மடிந்தான். பீஷ்மருக்கு எதிராக பிருகந்நளையை போரிடச்செய்து, பீஷ்மரை போர்செய்யவிடாமல் தடுத்து அவரைக் கொன்றனர். இதுபோன்று ஏராளமான நிகழ்வுகளைக் கூறலாம். பாரதப் போரில் தர்மம், நியாயம் இல்லை. எதைச் செய்தால் வெற்றிபெறலாம் என்பதே குறிக்கோளாக இருந்தது. அதுபோல்தான் இந்தப் பொதுத் தேர்தல் இருக்கும்.
வாக்களிக்கும் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் 500, 1000 என்று பணம் கொடுத்து வேட்பாளர்கள் ஓட்டுகளை வாங்குவார்கள். ஆனால் வெற்றி பெறும் நிலையிலுள்ள வேட்பாளர்களை, எதிரணியினர் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, தான் தோல்வியடைந்ததாக எழுதி வாங்கிவிடுவார்கள். கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்போது அவர்களுக்குத் தங்கள் கட்சியோ, கொள்கையோ, தன்னை நம்பிய தலைவரோ முக்கியமில்லை. அதனால் முதல்வர் பதவியை அடையநினைக் கும் கட்சித் தலைவர்கள் பதவியை அடையமுடியாமல் போகநேரும். யாரை நம்புகிறார்களோ அவர்களே துரோகம் செய்வார்கள்.
தமிழகத்தில் மிகப்பெரும் கட்சிகளாக உள்ள தி.மு.க., அ.தி.மு.க ஆகியவையும், அதன் தலைவர்களும் இதுபோன்ற சூழ்ச்சிகளை எதிர்கொள்ள நேரும். மகாபாரதப் போரின் முடிவில் அனைவரும் மடிந்து கிருஷ்ணரும் பாண்டவர்களும் மட்டுமே பிழைத்தனர்.
அதுபோல இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளையும் வீழ்த்தி, தாங்கள் மட்டுமே வாழவேண்டுமென்ற நிலையில் நம்பிக்கை துரோகம் நடக்கும். கூட்டணிக் கட்சிகளின் சூழ்ச்சியறியாமல் இவர்கள் வெற்றியைப் பறிகொடுக்க நேரிடும்.
ராகுவின் செயலால் உண்டாக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகளை யாகம் செய்து, பூஜை செய்து மாற்றமுடியாது என்பது சித்தர்கள் வாக்காகும்.
இந்தத் தேர்தலில் வெற்றி- தோல்வியை நிர்ணயிப்பது உழைப்பாளிகள், தொழிலாளர்களான பாமர மக்கள்தான். மதம், இனம் என்ற பேதமில்லாமல் இந்த மக்களைத் தங்கள்வசமாக்கி, அவர் களின் ஓட்டுகளைப் பெறுபவர் பதவியை அடைவர். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளின் பலத்தை நம்பாமல், தங்கள் சொந்த பலத்தை, சொந்த கட்சியினர், தொண்டர்களின் உழைப்பை நம்பி, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தலில் போட்டியிடவேண்டும். இரண்டு கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அதிக அளவு தொகுதிகளைத் தந்து, தங்கள் கட்சித் தொண்டர்களின் சக்தியை வீணாக்கிக்கொள்ளக்கூடாது. தொண்டர்களின் அதிருப்தியை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. சிறிய கட்சி களையும் வளர்த்துவிடுதல் நல்லதல்ல.
கூட்டணிக் கட்சிகளுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற தொகுதிகளைத் தரவேண்டும். கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தங்கள் சின்னத்தில் போட்டியிடாமல், அவரவர் சின்னத்திலேயே போட்டியிடச் செய்யவேண்டும் என்பது முக்கியம். அல்லது கூட்டணியிலிருந்து விலக்கலாம். தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, தங்கள் கட்சி வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைத் தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு, எதிரணியினரிடம் விலைபோகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தேர்தல் காலத்தில் எதிரணியினரின் பிரச்சார யுக்தியை அறிந்து, அதற்கேற்ப புதுப்புது வியூகங்களை வகுத்து செயல்படவேண்டும். கோட்சார நிலையில் ராகு ரிஷபத்தில் உள்ளது. ரிஷப ராசி தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளைக் குறிக்கும். இதனால் தென்மாவட்டங்களில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும், தங்கள் கட்சிக்காரர்களாலும் கூட்டணியினராலும் குழப்பங்கள், இழப்புகள், துரோகங்கள் உண்டாகும். எனவே கவனமாக இருந்து அவற்றை சரிசெய்து கொள்ளவேண்டும்.
ராகு சஞ்சாரம் செய்யும் ரிஷபம் சுக்கிரனின் ஆட்சி வீடு. சுக்கிரன் கலைகளுக்குக்காரகன். பொதுவாக இப்போது கலைத்துறையில் உள்ளவர்களுக்கு ராகு பாதிப்புகளை உண்டாக்குவார். ராகு ரிஷபத்திற்கு மாறியபிறகே கலையுலகில் புகழ்பெற்ற சிலர் மரணத்தையும், பலர் பலவிதமான சிரமங்களையும் அடைந்தனர் என்பதை அனுபவத்தில் அறிந்துள்ளோம்.
கலைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிறப்பு ஜாதகத்தில் ரிஷபம், கன்னி, மகர ராசிகளில் குரு, சனி, ராகு- கேது ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ இருந்தால், அவர்கள் கலைத் தொழிலில் இருந்துகொண்டு அரசியலிலும் ஈடுபட்டிருந்தால் ராகுவின் தாக்கத்தால் அவப் பெயர், தன்னைவிட கீழானவர்களால் துன்புறுத்தப்படுவது, தொழில் தடை- இதுபோன்ற ஏதாவதொருவகையில் சிரமங்களை அனுபவிக்க நேரும்.
அரசியல் தொடர்புள்ள கலைஞர்கள் இப்போது அரசியல் சார்ந்த செயல்களில் தனக்காகவும், தன்னைச் சார்ந்தவருக்காகவும் ஈடுபட்டு செயல்படக்கூடாது. அரசியலை விட்டு விலகி அமைதியாக இருப்பதே ராகு தரும் தீயபலன்களுக்குப் பரிகாரம், நடைமுறை நிவர்த்தியாகும். பாதிப்பு ஏற்படாது.
ரிஷபத்திற்கு ஏழாம் இடமான விருச்சிகத்தில் தடைகளை உண்டாக்கும் கேது இருப்பதால், குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் நடக்காமல்கூட போகலாம்.
ஜனாதிபதி ஆட்சி வந்தாலும் வரலாம்.
இன்றைய நாளில் கோவில் திருவிழா என்றால் கூட்டம் கூடுவது, ஆடு, கோழி, பலிகொடுத்து, மது அருந்துவது, மாமிசம் உண்பது, மதம், இன பாகுபாடு பார்த்து மக்களைப்பிரித்து வைப்பது, தங்கள் கௌரவத்தைத் தக்கவைத்துக்கொள்ள கலவரங்களை உண்டாக்குவது, பழைய பகையைத் தீர்த்துக்கொள்ள முயல்வது, பணம், பொருள், நகைகளைத் திருடுவதென- இதுபோன்று மக்களுக்கு இடையூறு தரும் சம்பவங்கள்தான் கடவுள் பெயரால் திருவிழா, உற்சவங்களில் நடைபெற்று வருகின்றன.
2021 தேர்தல் திருவிழாவில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் குறைவிருக்காது. ஜீவநாடி யில் சித்தர்கள் கூறியுள்ள இந்த விவரங்களை தேர்தல் சமயத்திலுள்ள கிரக நிலைகளுடன் ஒப்பிட்டு அறிந்தவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன். 2016 தமிழகத் தேர்தலிலும், தற்போது நடந்த பீகார் தேர்தலிலும் ஜீவநாடிப் பலன்கள் சரியாகவே நடந்தன. முக்கியமான இரண்டு கட்சிகளும் நம்பிக்கை அடிப்படையில் தேர்தல் போரில் ஈடுபடாதீர்கள். சரியான நடைமுறைச் செயல்களைச் செய்து தேர்தலில் ஈடுபட்டால், ராகுவின் தாக்கத்தையும், சாணக்கியர்களின் தந்திரங்களையும் முறியடித்து வெற்றிபெறலாம்.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லா காலங்களிலும் தமிழக முதல்வராகும் யோகமுள்ள ஜாதகர் யார்?
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 99441 13267